(யெமனிய அரபிகளின் வருகையை தொடர்ந்து இலங்கையில் சோனக முஸ்லிம்களின் தோற்றம் ஆரம்பித்தது. யெமனியர்களின் வருகையோடு எவ்வாறு முஸ்லிம் சமுதாயம் உருவாகி வளர்ச்சி பெற்றது என்பதை வரலாறு நெடுகிலும் வந்த வாய்மொழிக் கதைகளையும் சற்றே கற்பனையும் கலந்து படைக்கப்பட்டதே இப்படைப்பு.)
” வேகமாக படகை செலுத்தும் செல்ல வேண்டிய தூரம் ஏராளம்”. “சகோதரா இவ் விலைமதிப்பான பட்டு துணிகளை வேறாக பிரித்து வையும்”. “நண்பரே படகிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை நிலை தடுமாறுகிறது. சரி கரையை அண்டியதும் சற்று கரையேறுவோம்.” “அதோ சிற்றூரொன்று தென்படுகிறது சகோதரா… சரி வாரும் செல்வோம்.”
“என்ன ஊர் இது , ஏதும் தெரியவில்லையே.. சரி வாரும் ஊரிற்குள் நுழைவோம். ஓரிரு நாட்கள் தங்கி விட்டு புறப்பட தாயாராவோம். இருக்கின்ற பொருட்களை விற்றாவது சமாளிப்போம். சரி ஆளுக்கொரு திசையில் சென்று வியாபாரத்தை பார்க்கலாம். மீண்டும் இதே இடத்தில் சந்திப்போம்.
(சிறிது தூரம் சென்ற பின் அவருக்கு தாகம் எடுக்கிறது).
தொண்டை வேறு வரண்டு விட்டது தாகமாக இருக்கின்றதே. ஊரிலும் யாரும் தென்படுவதற்கில்லை. இனி இப்பொருட்களை சுமக்க முடியாது. அதோ அங்கு வீடொன்று உள்ளது. இதை இங்கே வைத்து விட்டு சற்றே கதைத்துப் பார்ப்போம்.
“யாராவது இருக்கின்றீர்களா? யாராவது இருக்கின்றீர்களா? (சற்று நேரத்தில் ஒரு யுவதி வெளியே வருகிறாள்.)”என்ன வேண்டும்?” சற்று தாகமாக இருக்கிறது தண்ணீர் கிடைக்குமா?( சிங்கள பெண்மணிக்கு இவரது மொழி புரியாமல் தடுமாறினாள். ஒருவாறு அரபி சைகை மொழியினால் தனக்கு தண்ணீர் வேண்டும் என்று உணர்த்தினார்.) தண்ணீர் கொடுக்க மனம் வராது தாகம் தீர பறித்து வைத்திருந்த இளநீரை கொடுத்தாள். தாகம் தீர இளநீரை அருந்திய அரபிக்கு வயிற்றுடன் சேர்ந்து மனதும் குளிர்ந்தது.”இந்தாரும் அம்மா மிக்க நன்றி தண்ணீர் வேண்டிய எனக்கு அரும் பானமே தந்தாய் உனக்கு தருவதற்கு என்னிடம் ஏதுமில்லை. இந்த மோதிரத்தை வைத்துக்கொள். புறப்படுகிறேன் நன்றி.”
அறபி புறப்பட வீட்டிற்குள் சென்றாள் அவ் யுவதி. தந்த மோதிரத்தை அணிந்து அழகு பார்த்துக்கொண்டு இரசித்துக்கொண்டிருந்தாள். காட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த தாய் வீட்டிற்கு வந்தார்.” மகளே, ஓடிவா இந்த விறகுகளை எடுத்து வை” மகள் ஓடி வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு தான் முன்பு செய்து கொண்டிருந்த வேலையை தொடர்ந்தாள். இதனை அவதானித்த தாய் “ஏது இந்த மோதிரம்” என வினவ, நடந்தவற்றை கூறினாள் அவள். கடுங்கோபம் கொண்டார் தாய். “என்ன காரியம் செய்தாய் நீ, ஒரு ஆணின் கையால் மோதிரம் அணிவதும் ஒன்று பெறுவதும் ஒன்று. மோதிரம் ஆணினால் அணிவிக்கப்பட்டால் திருமணம் நிறைவேறியதாக அரத்தம். இனி நீ எனக்கு மகளல்ல அந்நபரின் மனைவியாகி விட்டாய், நீ இனி அந்நபருடனே சென்று விடு என்றால் தாய்” . கண்ணீரும் கம்பலையுமாக தேம்பி தேம்பி அழுதவளாக மற்றைய நாள் அரபி வியாபாரத்திற்கு வருவார் என எண்ணி காத்திருந்தாள். அங்கனமே அவரும் வந்தார். தனக்கு உதவிய பெண் நின்று கொண்டிருப்பதை அவதானித்தார். அப்போதே அப்பெண்ணும் தனக்கு நடந்த அநீதியை கூறினாள். நீதி , நேர்மை தவறாத அரபியும், அவளது நிலை உணர்ந்து “சரி, உனக்கு இங்கனம் அநீதி இடம்பெறக்கூடாது உன்னை நானே மணந்து கொள்கிறேன்.” என்று கூறி அராபிய முறைப்படி திருமணம் செய்து அவளை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் யெமனிய அரபி மற்றும் சிங்கள பெண்ணிலிருந்து பேருவலையில் சோனக சமூகம் உருவாக தொடங்கியது.
**
அதன் பின்னர் நபியவர்களுக்கு நபித்துவம் கிடைக்கப்பெற்று இஸ்லாம் அறிமுகமாகியதை தொடர்ந்து யெமனிய அரபிகளால் உருவான சோனக சமூகமும் இஸ்லாத்தை ஏற்று இலங்கையில் முதன் முதலாக பேருவளை பிரதேசத்தில் முஸ்லிம்களின் வரலாறு துவங்குகிறது.
இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் தமது ஐவேளை தொழுகையை நிறைவேற்ற மஸ்ஜித் ஒன்றை அமைக்க முனைந்தனர். அதனை தொடர்ந்து பேருவளை மருதானை பிரதேசத்தில் கி.பி. 920ல் மஸ்ஜித் அல் அப்ரார் பள்ளிவாயிலை அமைத்தனர். இன்று கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் இம்மஸ்ஜித் 1100 வருடங்களை கடந்துள்ளது.
F. Ishka Ashraf
-University of Colombo-